புது வீடும் பூஜைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவமும் | Impotance of Grihapraveysham .

புது வீடும்.. பூஜைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவமும்...

வீ டு கட்டத் தொடங்குவதற்கு வேதத்தில் 'கிருகாரம்பம்' என்று பெயர். 

வீடு கட்டி குடிபுகுவதற்கு 'கிருஹப்ரவேசம்' என்பார்கள். இதனை தற்போது பலரும் 'புதுமனை புகுவிழா' என்று விமர்சையாக கொண்டாடுகிறார்கள். நாம் வாழப்போகும் வீடு, நம் மன விருப்பங்களை நிறைவேற்றக்கூடியது. அதனை ஒரு கோவில் போன்றும், இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டியது அவசியம். இப்படி புது வீட்டில் அடியெடுத்து வைக்கும் போது செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

புதிய வீட்டில் குடியேறுவதை சிலர் விமரிசையாக கொண்டாடுவர். அப்படி செய்யும் போது, பூஜைக்கும், அதை முறையாக செய்ய வேண்டிய நேரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாறாக, ஊர் பெரியவர்கள், முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்திவிட்டு, பூஜைக்கான நேரத்தை தவற விட்டுவிடக்கூடாது.

புதுமனை புகுவிழாவை, பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளாகவோ, லக்ன முகூர்த்தமான 6 மணி முதல் 7 மணிக்குள்ளாகவோ செய்துவிட வேண்டும். காலை 9 மணிக்கு மேல் கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது.இந்த நிகழ்வின் போது, வீட்டின் உரிமையாளர்கள் நமது பாரம்பரிய உடையான வேட்டி, துண்டு, புடவை அணிந்திருக்க வேண்டியதும் அவசியம். 

Also Read sri-kubera-ashtothram-108-namavaliClick Here

வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு கோபுர வாசலில் இறைவனின் படம், அரிசி, உப்பு, பருப்பு, நிறை குடத்தில் நீர், காமாட்சி தீபம், ஐந்து வகையான மங்கலப் பொருட்கள், 5 வகை பழங்கள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் ஆகியவற்றுடன், மங்கள வாத்தியங்கள் முழங்க வீட்டு வாசலுக்கு இறை நாமங்களை உச்சரித்தபடி வர வேண்டும்.

கோ பூஜை: 

அனைவரும் மங்கலப் பொருட்களோடு வீட்டு வாசலில் நிற்கையில், ஒரு பசுவையும் கன்றையும் அழைத்து வந்து வீட்டை பார்த்தபடி நிறுத்த வேண்டும். வீட்டின் உரிமையாளர் தன் மனைவியோடு சேர்ந்து, பசுவின் அங்கங்களில் பொட்டு வைத்து, துணி, மாலை அணிவித்து, அரிசியும் வெல்லமும் கலந்த கலவையையும், அகத்திக் கீரையையும் பசுவுக்கு கொடுக்க வேண்டும். 

அதே போல் பசுவின் கன்றுக்கும் செய்ய வேண்டும். தொடர்ந்து பசுவுக்கும், கன்றுக்கும் தூப, தீபம் காட்ட வேண்டும். பின்னர் வீட்டில் வசிக்கப் போகும் பெண், கையில் காமாட்சி விளக்கை ஏந்தியபடி கணவனுடன் சேர்ந்து, பசுவையும் கன்றையும் வீட்டிற்குள் அழைக்க வேண்டும். அதன்பிறகே வீட்டிற்குள் நடத்த வேண்டிய விநாயகர் பூஜை, கலச பூஜை, யாக வழிபாடு போன்ற முக்கிய பூஜைகள் செய்யப்பட வேண்டும்.

ஒரு சிலர் நிலைப்படி பூஜையை, பசு வீட்டிற்குள் வருவதற்கு முன்பாகவே செய்வார்கள். ஆனால் நியமத்தின் படி, அக்னியில் யாகப் பொருட்களை இட்டு, மகாலட்சுமியை அழைத்த பிறகே, படி பூஜை செய்வது நல்லது. யாக பூஜை முடிந்ததும், அனைவருக்கும் தீப பிரசாதம் கொடுக்கலாம். பின்னர் மூன்று கலசங்களில் வைக்கப்பட்ட நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.இந்த பூஜைகள் எல்லாம் முடிந்த பிறகே வீட்டில் பால் காய்ச்ச வேண்டும். வீட்டில் உள்ள கியாஸ் அடுப்புகளில் பால் காய்ச்சுவதுதான் பெரும்பாலானவர்களின் செயலாக இருக்கிறது. 

ஆனால் ஒன்பது செங்கல் அல்லது 4 செங்கல் வைத்து, அதற்கு பூ, சந்தனம், குங்குமம் வைத்து, அதன் மேல் புதிய பாத்திரம் வைத்து, அதில் பால் ஊற்றி காய்ச்சுவதுதான் சிறப்பானது. பால் பொங்கி வரும் போது கைகூப்பி, இறைவனை வணங்க வேண்டும். பின்னர் சாமி படத்தின் முன்பாக காய்ச்சிய பாலை வைத்து, விநாயகர், குலதெய்வம், இஷ்ட தெய்வம், லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை நினைத்து ஆரத்தி காட்ட வேண்டும்.பாலை அனைவருக்கும் கொடுப்பதற்கு முன்பாக, கலசதாரை வார்த்தல் என்ற நிகழ்வைச் செய்ய வேண்டும். 

Also Read Anjaneyar-mantraCLICK HERE

அதன்படி கிரகப்பிரவேச பூஜைகள் முடிந்த பிறகு, வீட்டின் மாடிப்பகுதியில் ஈசான்ய மூலையில் வேதபண்டிதர் நிற்க, அவருக்கு முன்பாக வீட்டின் உரிமையாளரும், அவரது மனைவியும் நிற்க வேண்டும். அவர்கள் மீது மூன்று கலசத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட நீரை ஊற்ற வேண்டும். இப்படி கலசநீரை அபிஷேகம் செய்வதால், சர்வ தோஷங்களும் விலகி, லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.அதன்பிறகு சாமி படத்திற்கு முன்பாக வைக்கப்பட்ட பாலை எடுத்து, வீட்டின் உரிமையாளரும், மனைவியும் முதலில் குடிக்க வேண்டும். பின்னர் தங்களின் உறவினர்களுக்கும், வந்திருக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் கொடுக்க வேண்டும்.

புது வீட்டில் குடிபுகுந்த முதல் நாள் இரவு, வீட்டில் உள்ள பெண், விளக்கு ஏற்றி, துளசி துதி, மகாலட்சுமி மந்திரங்களை படித்தல் வேண்டும்.. வீட்டில் வருடத்திற்கு ஒரு முறை, உங்கள் விருப்ப தெய்வத்தின் மந்திரங்களைக் கூறி 'யக்ஞ பூஜை' செய்யலாம். புது வீடு கட்டி குடியேறுபவர்கள், சாமி படங்களை பூஜை அறையிலும், தங்களின் முன்னோர் படங்களை தனியாக ஒரு அறையிலும் வைத்து ஆராதிக்கலாம். சாமி படங்களோடு, முன்னோர்களது படங்களையும் வைத்தால், தெய்வ சக்தி அகன்று, புது வீட்டில் இடர்கள் உருவாக வாய்ப்புள்ளது.

சுபம்

Post a Comment

0 Comments