Karthika Puranam Day 3 - pdf

 

karthika puranam day 3
karthika puranam day 3

கார்த்தீக புராணம் மூன்றவது அத்யாயம் 

இவ்விதமாக கிருஷ்ண பரமாத்மா சொன்னதைக் கேட்ட சத்யபாமை மிக்க சந்தோஷத்துடன் , ஹே நாதா ! மாதங்களுக்குள் கார்த்திகை மாதமும் , திதிகளுக்குள் ஏகாதசி திதியும் , இவ்வளவு சிறப்பாக கொண்டாடுவதற்குக் காரணம் என்ன ? என்பதைப்பற்றி நான் எதுவும் அறிகிலேன் . ஆகையால் , தாங்கள் கிருபை கூர்ந்து அந்த விவரத்தைச் சொல்ல வேண்டுமென்று கேட்கவே , கருணாநிதியான கண்ணனும் ஆனந்த பரிதனாகி , பூர்வத்தில் நாரதரால் பிருகு மஹாராஜனுக்கு சொல்லப்பட்ட விபரங்களை எடுத்துச் சொல்லலானார் . 

கேளாய் , பாமா ! இந்தக் கார்த்திக மாஹாத்மியத்தின் மஹிமையை யாராலும் பூரணமாகச் சொல்லச் சாத்தியம் ஆகாது என்றாலும் , என்னால் முடிந்த வரையில் சொல்லுகின்றேன் . 

இந்தக் கார்த்தீக மாஹாத்மியத்தை கார்த்திகை மாதத்தில் எவனொருவன் பக்தி சிரத்தையோடு ஒரு அத்தியாயமோ அல்லது ஒரு சுலோகமோ வாசிப்பானோ அவன் தேவ கணங்கள் கொண்டாடத் தக்கவனாய் , சுவர்க்கலோகத்தில சென்று சுகம் அனுபவிப்பான் என்று கார்த் தீக மாஹாத்மியத்தின் மஹிமையைக் கூறி , மறுபடியும் சொல்லத் துவங்கினார் .

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் - தெரிந்து கொள்ளவேண்டிய ஆறு 

 முற்காலத்தில் ஸ்ரோணிதபுரி என்னும் நகரத்தில் , சாகரன் என்ற ஓர் அசுரன் இருந்தான் . அவ்வரசனுக்கு சங்கன் எனும் குமாரன் இருந்தான் . அவன் மிகுந்த புஜபல பராக்ரமம் உடையவனாயும் , மூன்று உலகங்களையும் ஜயிக்கவல்ல அபார சாமார்த்தியமும் உடையவன் ஆகவும் இருப்பதை அறிந்த சாகரன் தனது பிள்ளை சங்கனுக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகம் செய்துவைத்தான் யுவராஜாவான சங்கன்  திக்விஜயம் செய்து வருவதற்கு தந்தையிடம் விடைபெற்றுப் புறப்பட்டு , இந்திரன் முதலிய அஷ்ட திக் பாலகர்களையும் ஜெயித்து , தபோ நிதிகளான மஹருஷிகளையும் மிகவும் இம்சித்து மிக்க கர்வத்துடனும் , அட்டகாசத்துடனும் , மிகவும் ஆடம்பரமாகவும் தனது ராஜ்யத்தை அடைந்து , அகில உலகங்களிலும் அதிகாரத்தை செலுத்தி , தனக்கு நிகர் எவரும் இல்லை என்று கர்வத்துடன் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான் இப்படியிருக்க இந்திரன் முதலிய சகல தேவர்களும் தமது பட்டம் , பதவி , அதிகாரம் இவைகளை இழந்து , அவ்வசுரன் செய்யும் கொடுமைகளைச் சகிக்காது பயந்து , மேரு பர்வதத்தில் இருக்கும் ஓர் குகையை அடைந்து காலம் கழிக்காலானார்கள் . 

அவ்வசுரனாகிய சங்கனோ , தேவர்களுடைய பலத்தை அடியோடு ஒழித்துவிடவேண்டுமென்ற கருத்தை உடைய வனாகி , தேவர்களுக்கு மூல பலமான வேதங்களை அபகரிக்க நினைத்து , தனது படை பலத்தோடு புறப்பட்டு சத்ய லோகத்திற்குச் சென்று , பிரம்மாவோடு யுத்தம் செய்து ருக் , யஜுஸ் , சாமம் , அதர்வணம் எனும் நான்கு வேதங்களையும் , மந்த்ர பீஜாக்ஷர தேவதைகளை விவரிக்கின்ற வேத ஆகமங்களையும் அபகரித்துக் கொண்டு தனது ராஜ்யத்தை அடைத்தான் . 

இந்த விஷயத்தை ஞான திருஷ்டியால் அறிந்த தேவர்கள் யாவரும் தங்கள் உயிருக்கும் தீங்கு ஏற்பட்டுவிடுமோ ... என நினைத்து அவ்வசுரனுக்குப் பயந்து சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டனர் . 

அவ்வசுரனும் தேவர்களுடைய பலத்தைப் போக்கி ஒழித்து விட நினைத்து , தேவர்கள் வசித்துக்கொண்டிருந்த குகைக்கு வரவே , அங்கு தேவர்களைக் காணாது போகவே , தான் எப்படியாவது தேவர்களைக் கண்டுபிடித்து விடவேண்டும் என்று தாதர்களை ஏவி , அவர்கள் மூலமாக தேவர் யாவரும் சமுத்திரத்தில் ஒளித்திருப்பதை அறிந்து , தானும் சமுத்ரத்திற்குச் சென்று தேடிப் பார்க்க ... தேவர்கள் காணாமல் போகவே , மஹா கோபத்துடன் விட்டேனா பார் என்று அத் தேவர்களை என்று ஓரிடம் விடாமல் சமுத்ரத்தைக் கலக்கித் தேடிக்கொண்டு இருந்தான் .

இவ்வாறு அந்த அசுரன் தங்களைத் தேடிக் கொண்டிருப்பதை அறிந்த தேவர்கள் அனைவரும் அங்கிருந்து மாயமாய் மறைந்து பிரம்மாவிடம் முறையிடுவதற்காக சத்யலோகத்திற்குச் சென்றனர் . 

ஸத்யலோகத்தில் பிரம்மாவும் வேதங்களைப் பறிகொடுத்து விட்டதனால் ஏற்பட்ட துக்கத்தைத் தாளாது , ஒன்றும் செய்ய வழியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கையில் தேவர்களும் வந்து சேர்ந்து , தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைத் தெரிவித்து முறையிட , ஓ தேவர்களே ! நானே சொல்லவொணாத கஷ்டமான நிலையில் இருக்கிறேன் . நான்கு வேதங்களையும் சங்கன் எனும் அசுரன் அபகரித்துச் சென்றுவிட்டான் , என்னால் செய்யத்தக்கது ஒன்றுமில்லை . நாமெல்லோரும் ஸ்ரீமஹா விஷ்ணுவிடம் போய் முறையிடுவோம் , அவரைத் தஞ்சம் அடைவோம் . பயப்படாதீர்கள் ! என்று சொல்லி என்னுடன் வாருங்கள் என தேவர்களையும் அழைத்துக்கொண்டு ஸ்ரீவைகுண்டம் சென்றடைந்தார் . 

ஸ்ரீவைகுண்டத்தில் லக்ஷமீபதியான ஸ்ரீமந்நாராயணனன் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பதைத் துவாரபாலகர்களால் அறிந்து பிரம்மாவும் , தேவர்களும் மற்றும் பகவானைச் சேவிக்க வந்த சனக சனந்தாதியரும் பகவானது யோக நித்திரையக் கலைப்பதற்கு கீதவாத்தியங்கள் முழங்கி பகவானை ஸ்தோத்ரம் செய்தார்கள் . 

வனமாலீகதீ சாரங்கீ சங்கீ சக்ரீச நந்தகீ 
ஸ்ரீமான் நாறாயணோவிஷ்ணு : வாஸுதேவ : அபிரக்ஷது !

மேற்கொண்ட வையின் அர்த்தம்:

( வனமாலையை தரித்துக்கொண்டு கௌமாதகம் என்ற கதையையும் , கோதண்டம் என்ற வில்லையும் , பாஞ்சஜன்யம் என்ற சங்கத்தையும் , சுதர்ஸன சக்ராயுதத்தையும் , நந்தகம் என்ற ஈரேழு உலகங்களையும் ) கார்த்துக்கொண்டு விளங்கிவரும் வாசுதேவனான ஸ்ரீலக்ஷ்மீ நாராயணன் என்னை உடனடியாகக் கார்த்து அருள்புரியட்டும் . ) 

ஸ்ரீமந் நாராயணனும் யோக நித்திரையிலிருந்து விடுபட்டு தேவகணங்களுக்கும் , ருஷிகளுக்கும் தனது திவ்ய மங்கள பேத்துடன் காட்சியளித்து அபயப்ரதானம் செய்து . தேவர்களே உங்களுக்கு ஏற்பட்ட குறை யாது ? தெரிவியுங்கள் என்று கேட்டார். 

பிரஹ்மாதி தேவர்கள் பகவானைப் பிரார்த்தித்து , ஹே ப்ரபோ ! தாங்கள் அறியாததும் ஏதாவது உண்டோ என்று கூறி ஸ்ரோணிதபுரியில் வாசம் பண்ணுகின்ற சாகரன் என்பவனின் குமாரனான சங்கன் என்ற அசுரன் எனது வேதங்களைப் பறித்துக் கொண்டதோடு , தேவர்களுடைய பலத்தை முழுவதுமாக போக்கி தேவர்களையே ஒழித்துவிட வேண்டும் என்பதற்காக சமுத்ரத்தைக் கலக்கி , தேவர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறான் . அந்த அசுரனுக்குப் பயந்து சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டிருந்த தேவர்கள் என்னிடம் வந்து முறையிட அவர்களையும் அழைத்துக்கொண்டு தங்களையே சரணாகதி அடைய வந்திருக்கிறோம் . அக்கஷ்டத்திலிருந்து தாங்கள்தான் ரக்ஷிக்க வேண்டும் . அவ்வசுரனை சம்ஹாரம் செய்து எனது வேதங்களையும் நான் அடையச் செய்யவேண்டும் என்று தெரிவித்து பிரார்த்திக்க , பகவானும் , ஓ பிரம்மரே ! - தேவர்களே ! பயப்பட வேண்டாம் . உங்கள் கவலை ஒழிந்து விட்டதென நினையுங்கள் . உங்கள் அபீஷ்டம் யாவும் விரைவில் சித்திக்கும் . அதாவது கார்த்தீக சுக்லபக்ஷ ஏகாதசி தினம் இன்றுதான் . அப்பேர்ப்பட்ட தினத்தில் ப்ராதக் காலத்தில் கீத வாத்யங்களோடு என்னை ஸ்தோத்திரம் செய்து எனது யோக நித்திரையைக் கலைத்ததினால் , உங்களுக்கு ஒரு குறையுமில்லை . பூவுலகிலும் மானிடராய்ப் பிறந்தோர் யாராயினும் உங்களைப்போல கார்த்தீக சுக்லபக்ஷ ஏகாதசி அன்று ப்ராதக் காலத்தில கீத வாத்தியங்களோடு என்னை ஸ்தோத்ரம் செய்வார்களேயாகில் , அவர்கள் இகத்தில் வேண்டிய சுகபோகங்களையும் அனுபவித்து பரலோகத்தில் எனது சாயுஜ்யத்தை அடைவார்கள் என்று கூறி , தேவர்களே உங்கள் இடரைப் போக்க நான் மத்ஸ்யாவதாரம் எடுத்து அவ்வசுரனாகிய சங்கனைக் கொல்லப்போகிறேன் . நீங்கள் யாவரும் கடற்கரையில் என்னைச் சந்தியுங்கள் , என்று கேட்டுக் கொள்ள , அவ்வாறே தேவர்கள் யாவரும் ஸ்ரீவைகுண்ட நாதனைக் கை கூப்பித் தொழுது பிரியாவிடை பெற்றுச் சென்றனர் . என்று பூர்வத்தில் நடந்த , நாரத பிருது சம்வாதமாகிய சரிதத்தைக் கண்ணபிரான் பாமைக்குச் சொல்ல அதைக் கேட்ட சத்யபாமை ஹே , ஸ்வாமி ! அந்த சங்கனுடைய சம்ஹாரம் எப்படி நடந்தது ? என்பதையும் பிரம்மா வேதங்களை எப்படி அடைந்தார் என்பதையும் விவரமாகத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்க , பகவானும் சத்யபாமாவின் இருகைகளையும் தன் இரண்டு கரங்களினால் பற்றிக்கொண்டு புன் சிரிப்புடன் தொடர்ந்து சொல்லலானார் .

மூன்றாவது அத்யாயம் முற்றிற்று .

Post a Comment

0 Comments